சென்னை தீவுத்திடலில் Rock with Raja எனும் பெயரில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா முதல் பாடலாக ‘ ஜனனி ..ஜனனி’என்ற பாடலைப் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பாடல்களின் இடை இடையே திரைஇசைப் பயணத்தில் தனது அனுபவம் குறித்து பேசிய இளையராஜா, தீவுத் திடலில் இசைக் கச்சேரி நடத்த அனுமதி வழங்கிய தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்கு நன்றி தெரிவித்தார். மேலும், “பாடகர் எஸ்பிபியை நினைவுகூர்வதற்கு வார்த்தை வரவில்லை. ஆந்திரா , மேற்கு வங்கம் , மகாராஷ்டிரா என பல மாநிலங்களுக்கு ஆர்மோனியப் பெட்டியுடன் சென்று நானும் பாலசுப்ரமணியனும் பாடினோம். லதா மங்கேஷ்கர் மறைவும் வருத்ததிற்குரியது “என்று கூறினார்.
நடிகர் தனுஷ் , கங்கை அமரன் , பாடகர் மனோ , எஸ்.பி.பி. சரண் , இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர்.
மேடையில் ‘ என்னுள்ளே… என்னுள்ளே… ‘ என்ற பாடலை பாடகிகள் சிலர் இணைந்து பாடி முடித்தவுடன், மேடையின் முன்புறம் அமர்ந்திருந்த நடிகர் தனுஷ்ஷை எழுந்து நிற்க சொன்ன இளையராஜா, இந்த பாடல் நன்றாக வர உன்னுடைய மாமனார் தான் காரணம் . ரஜினிகாந்த் ரசனையோடு, காட்சியின் சூழ்நிலையை கூறியதால்தான் பாடல் சிறப்பாக வந்தது என்று கூறிய நிலையில் தனுஷ் புன்னகைத்தவாறு ரசித்து கைதட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தனுஷுடன் அவரது இரு மகன்களும் வருகை தந்திருந்தனர். இளையராஜா மட்டுமின்றி பாடகர் மனோ , இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாடகி பவதாரிணி உள்ளிட்டோர் பாடல்களைப் பாடிய நிலையில் ஸ்பீக்கர்கள் அவ்வப்போது சரியாக இயங்காததால் ஒருமுறை பாதி பாடலிலேயே இளையராஜா பாடலை நிறுத்தி பாடகர்களை மீண்டும் முதலிலிருந்து பாட வைத்தார்.
பார்வையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1லட்சம் வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாப் கார்ன் ஒன்று 100 ரூபாய்க்கும் , தேநீர் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.