பைக் திருட்டு எல்லா ஊர்களிலும் தடுக்க முடியாத விஷயமாகிவிட்டது. கோவை சுற்றுவட்டாரங்களில் பைக்குகளை திருடி, ஆன்லைன் மூலம் விற்கும் கும்பல் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிந்தது. ராகுல் கிருஷ்ணா என்ற இளைஞர், கணபதி அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக் திருடுபோனது குறித்து போலீஸில் புகார் அளித்திருந்தார்.
அந்த பைக்கை விற்பது தொடர்பாக பரவிய ஓர் வாட்ஸப் மெசேஜ் அங்கு சுற்றி, இங்கு சுற்றி கடைசியில் சரவணம்பட்டி போலீஸாருக்கு வந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸார், தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (23) என்கிற இளைஞர், 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறுகையில்,
“கைதான இருவரும் சமீபத்தில் வெளியான படம் ஒன்றை பார்த்திருக்கிறார்கள். அதில் வரும் காட்சிகளில் ஈர்க்கப்பட்டு, எளிதில் பணம் சம்பாதிக்க பைக்குகளை திருடத் தொடங்கியதாக கூறியுள்ளனர். குறுகிய நாள்களுக்குள் 11 பைக்குகளை திருடியுள்ளனர்.
திருடிய பைக்குகளை சமூகவலைதளங்களில் விளம்பரப்படுத்தி, ரூ.5,000 – 10,000 வரை விற்றுள்ளனர். தற்போதுவரை 11-இல், 7 உரிமையாளர்களை கண்டுபிடித்து பைக்குகளை ஒப்படைத்துவிட்டோம்.
மீதமுள்ள பைக் உரிமையாளர்களை கண்டறிந்து ஒப்படைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.” என்றனர். சிறுவன் ஜாமீனில் வெளிவந்த நிலையில், ஜீவானந்தம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.