நியூயார்க்:’உக்ரைன் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, மனிதாபிமான நிலை மோசமடைந்து வருவது கவலை அளிக்கிறது’ என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலால், உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோசமான மனிதாபிமான சூழல் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், ஐ.நா.,விற்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:’உக்ரைனில் உடனடியாக போரை நிறுத்தி, பேச்சு வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என, ரஷ்ய அதிபர் புடினிடம், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனில் மோசம் அடைந்து வரும் மனிதாபிமான சூழல் கவலை அளிக்கிறது. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர். 30 லட்சத்திற்கும் அதிகமானோர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைனில் சிக்கிஇருந்த மாணவர்கள் உட்பட, 22 ஆயிரத்து 500 பேரை, இந்தியா பத்திரமாக மீட்டுள்ளது. அத்துடன், 18 நாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கவும் உதவி புரிந்துள்ளது.
உக்ரைன் மக்களின் துயர் தீர்க்கும் நோக்கில், 90 டன் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. தேவைகளை பொறுத்து, வரும் நாட்களில் மேலும் பல பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பணி நீட்டிப்புஇந்தியாவுக்கான ஐ.நா., துாதர் டி.எஸ்.திருமூர்த்தியின் பதவிக் காலம், இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், அவருக்கு மேலும் மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement