புதுடெல்லி: கரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் வேகமெடுத்து வரும் நிலையில், அடுத்த பெரிய உருமாற்றம் ஏற்படாத வரையில் இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என தொற்றுநோயியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை படிப்படியாக குறைந்து வரும் வேளையில், உலக நாடுகளில் ஒமைக்ரான் வைரஸின் தாக்கம் மீண்டும் வேகமெடுத்து வருவாதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சீனா மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கையும் கடைபிடித்து வருகிறது. இதனால், இந்தியாவில் மீண்டும் ஒரு பெருந்தொற்று அலை ஏற்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. கரோனா வைரஸில் ஆபத்தான அடுத்த உருமாற்றம் நிகழாத வரையில் இந்தியாவில் தொற்று பரவும் ஆபத்து ஏதுமில்லை என தொற்றுநோயியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து நம்பிக்கையளித்துள்ளனர்.
கரோனா பரவல்: கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி, பல்வேறு நாடுகளை உலுக்கி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த இரண்டு வருடங்களாக உலகின் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்தை பாதிப்புக்குள்ளாக்கிய கரோனா வைரஸ் டெல்டா மற்றும் ஒமைக்ரான் என உருமாற்றம் அடைந்து மேலும் இரண்டு அலைகளை உருவாக்கி உலகையே புரட்டிப் போட்டது.
இந்தியாவில் கரேனா தடுப்பு நடவடிகை: உலக நாடுகளில் கரேனா முதல் அலை வேகமாக பரவி வரும் நேரத்திலேயே இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து முன்னெச்சரிக்கையாக நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதே போல் நோய் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், குறிப்பாக கடந்த 2021 கோடை காலத்தில் நிகழ்ந்த இரண்டாம் அலையின் கோரத்திற்கு பின்னர் நாட்டில் தீவிர தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் தங்களின் இரண்டு தவணைத் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டனர். நாட்டிலுள்ள வயது வந்தோரில் 80 சதவீதத்திற்கும் மேலானோர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதன் காரணமாக மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா மக்களிடம் நோய் எதிப்பு ஆற்றல் அதிகரித்திருந்தது. இதனை குறைந்து வரும் தொற்று பாதிப்பு தெளிவுபடுத்துகிறது. பிப்ரவரி நடுப்பகுதி வரை 27,000 ஆக இருந்து வந்த தினசரி தொற்று பாதிப்பு மார்ச் 18ம் தேதி 2,528 ஆக குறைந்திருந்தது.
மீண்டும் வேகமெடுக்கும் பாதிப்பு: இந்தியாவில் ஒமிக்காரன் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், உலக நாடுகளில் மீண்டும் தொற்றின் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. 2019-ம் ஆண்டு வூகான் நகரில் தொற்று ஏற்பட்டதில் இருந்து, தற்போது சீனா மிக அதிகமான தொற்று பாதிப்பைக் கண்டு வருகிறது. அங்குள்ள முக்கிய நகரத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,280 என சர்வதேச செய்தி நிறுவனமான ஏஃப்பி தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2020ம் ஆண்டில் தான் நாளொன்றுக்கு 3000 முதல் 5000 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஜெர்மனியில் புதன்கிழமையில் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,94,931 என அந்நாட்டின் பெருந்தொற்று நிலையை கண்காணித்து வரும், ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, ஸ்விட்சர்லாந்து. நெதர்லாந்து, இத்தாலி, இங்கிலாந்தில் ஒமைக்ரானின் துணைவகையான BA.2 வேகமாக பரவி வருகிறது. இத்தனைக்கும் ஐரோப்பிய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.
குறைவான நோய் தொற்று பாதிப்புகளை கொண்டிருந்ததற்காக அதிகம் பாராட்டப் பெற்ற தென்கொரியாவில், புதன்கிழமையில் 6 லட்சத்திற்கும் அதிமான தொற்று பாதிப்ப பதிவாகியிருந்தது. தென்கொரியாவில் 82 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் புதன்கிழமை அன்று, பல வாரங்களாக சரிந்து வந்த கரோனா தொற்று பாதிப்பு உலக அளவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு ஆபத்தா? – அதிகமான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டவர்களின் சதவீதம் அதிகமுள்ள நாடுகளில் மீண்டும் தொற்று வேகமாக பரவி வரும் நிலை மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கரோனா பெருந்தொற்றின் நான்காவது அலை ஜூன் மாதத்தின் இறுதியில் தொடங்கி நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் குறைந்து வரும் கரோனா தொற்று பாதிப்பு இப்படியே தொடரும் என்றும், இந்தியர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம் என்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வைரலாஜிஸ்டான டாக்டர் ஜேக்கப் ஜான் அளித்த பேட்டி ஒன்றில், ’தற்போது உலக நாடுகள் பலவும் வீரியம் மிக்க மாறுபட்ட ஒமைக்ரான் வைரஸினால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இது ஓர் ஆற்றில் நீந்திச்செல்வது போன்றது. இந்தியா அந்த நதியை கடந்துவிட்டது. சில நாடுகள் இன்னும் அதில் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பா, சீனா மற்றும் கொரியாவில் ஒமைக்ரான் பாதிப்பு தாமதமாக ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கத்தை அந்த நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்தியாவில் அதிமான பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது ஒமைக்ரான் பாதிப்பை குறைவாக இருந்ததற்கு ஒரு காரணம்” என்றார்.
இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் ஜனவரியில் தொடங்கிய கரோனா தொற்றின் மூன்றாவது அலைபாதிப்பு, 42 நாட்கள் நீடித்தத. அதில், 77.42 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மூன்றாவது அலை பிப்ரவரி 14 முடிவடைந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் மூறாவது அலையின் தொடக்கத்தில், இந்தியாவில் வயதுவந்தோறில் சுமார் 90.8 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்தி இருந்தனர். இரண்டாவது அலை தொடங்கிய போது இந்த எண்ணிக்கை 10 சதவீதமாக இருந்தது. இதனால் இரண்டாவது அலையில் 2.52 லட்சமாக பதிவாகியிருந்த இறப்பு விகிதம் மூன்றாவது அலையின் போது, 27,118 என பதிவாகியிருந்தது.
இதுகுறித்து பொதுச் சுகாதாரத்துறை நிபுணரான டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா கூறும்போது, ” முதலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பின்னர் நோய் தொற்றுக்கு ஆளான நாடுகள், நோய் தொற்றுக்கு ஆளாகி பின்னர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடுகளை விட தற்போது அதிகம் தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. நோய் தொற்று ஏற்பட்டு அதனால் இயற்கையாக கிடைக்கும் நோய் எதிர்ப்பாற்றலுடன், தடுப்பூசி மூலம் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பாற்றலும் சேரும் போது அவை வைரஸுக்கு எதிராக ஆற்றலுடன் செயல்படுகிறது.
கடந்த ஆண்டு கோடையில் பரவிய டெல்டா வைரசால் இந்தியாவும் பாதிக்கப்பட்டது. இது கடுமையான தொற்று நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மக்களுக்கு அளித்தது. இந்தியாவில் கரோனா தொற்று முடிவடைந்து விட்டது.
இந்தியாவைப் போல சீனா இயற்கையான நோய் தொற்று எண்ணிக்கையை பதிவு செய்யவில்லை. அதேபோல் சீனாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளான கரோனாவேக், சீனோரம் மற்ற தடுப்பூசிகளைக் காட்டிலும் குறைவான தடுப்பாற்றல் கொண்டவையே” என்றார்.
முதியவர்களை பாதிக்கும் தொற்று: வேலூரிலுள்ள கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரியின் நுண்ணுயிரியல் நிபுணர், ககன்தீப் காங் கூறுகையில், ”ஒரு நாட்டின் மக்கள் தொகை விகிதமும் நோய் தொற்று ஏற்படுவதில் பங்கு வகிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் மூத்த குடிமக்கள் அதிகம் உள்ளனர். அதனாலேயே இந்தியாவைக் காட்டிலும், அதிகமாக தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இரண்டு தவணை தடுப்பூசி மற்றும் ஒரு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவருடன் ஒப்பிடுகையில், கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு, மீண்டு பின்னர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்பாற்றல் வலுவாக உள்ளது.
இந்தியாவில் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு, பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வலுவான பாதுகாப்பில் இருப்பதாக கருதிக்கொள்ளலாம்.
டெல்டாவை விட தீவிரமான மற்றும் ஒமைக்ரானை விட வேகமாக பரவக்கூடிய ஒரு புதிய உறுமாறி வைரஸ் மாறுபாடு தோன்றாத வரை இந்தியாவில் மற்றொரு அலை பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை” என்று அவர் தெரிவித்தார்.