குஜராத்தைப் போல கர்நாடக பள்ளி பாட திட்டத்திலும் பகவத் கீதை!| Dinamalar

பெங்களூரு: ”குஜராத் போன்று, கர்நாடகாவிலும் பாடப்புத்தகத்தில் ‘பகவத் கீதை’ இடம் பெறுவது குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,” என கர்நாடக தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார்.

பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது: குஜராத்தில் மூன்று முதல் நான்கு கட்டங்களாக ‘மாரல் சயின்ஸ்’ எனப்படும் அறநெறி பாடத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக பகவத் கீதையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதுதான் என் கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக முதல்வருடன் விவாதித்த பின்னரே, அறநெறி பாடத்தை அறிமுகப்படுத்துவது குறித்து முடிவெடுப்போம்.

குழந்தைகளிடையே நமது கலாசார விஷயங்கள் மெல்ல மறைந்து வருகிறது. எனவே, அறநெறி பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமாயணம் மற்றும் மஹாபாரதம் தொடர்பான உள்ளடக்கம் கற்பிக்கப்படும் அறிநெறி வகுப்பு, வாரம் ஒருமுறை இருந்தது.வரும் நாட்களில் இதை அறிமுகப்படுத்துவது குறித்து முதல்வரின் ஆலோசனையைப் பெறுவோம். இதை கற்பிக்கலாம் என முடிவு செய்தால், கல்வி வல்லுனர்களுடன் வகுப்பின் கால அவகாசம் உட்பட விஷயங்கள் விவாதிப்போம்.

மகாத்மா காந்தி உட்பட பலர் பகவத் கீதை, ராமாயணம் மற்றும் மஹாபாரதம் உத்வேகம் அளிப்பதாக கூறியுள்ளனர்.மஹாத்மா காந்தியின் தாய், ராமாயணம், மஹாபாரதம் பெருமையை போதித்துள்ளார். பின், அவர் வளர்ந்த பின், ‘ராஜா ஹரிசந்திரா’ நாடகம் அவரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்கள் இல்லாத பண்டைய இந்தியாவில், ஒரு நல்ல கலாசார சமுதாயத்தை உருவாக்க, இந்த புத்தகங்களில் உள்ள போதனைகளே காரணம். எனவே, ஹிந்து சமய நுால்களிலுள்ள ஒழுக்கங்கள் குறித்து மாணவர்கள் போதிப்பதால், இந்திய கலாச்சாரத்தை அறிவர்.

சமுதாயத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் விஷயங்களை அறிமுகப்படுத்துவது நமது கடமை. எதை அறிமுகப்படுத்துவது என்பது குறித்து கல்வி வல்லுனர்கள் முடிவு செய்வர்.இரவில் உறங்குவதற்கு முன், பகவத் கீதை படிப்பதால், தனக்கு பலம் தருவதாக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, என்னிடம் கூறியுள்ளார். பகவத் கீதை, ராமாயணம், மஹாபாரதம் மட்டுமின்றி, பைபிள், குரானில் கூறப்பட்டுள்ள போதனைகளை அறிமுகம் செய்வது பற்றி, கல்வி வல்லுனர்கள் கூறும் விஷயங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கூறியதாவது: ஏற்கனவே பாட திட்டத்தில் இருக்கும் விஷயத்தை மீண்டும் புதிதாக பெரிதாக காட்ட தேவையில்லை. மதங்கள் தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆனால், பா.ஜ.,வினர் என்ன விஷயத்தை பாட புத்தகத்தில் கொண்டு வருகின்றனர் என்பதை பார்க்க வேண்டும். பா.ஜ., புதுமையான யோசனையை ஒன்றும் அறிமுகம் செய்யவில்லை.

கெங்கல் ஹனுமந்தய்யா முதல்வராக இருந்தபோதே, இரண்டு ரூபாய்க்கு பகவத் கீதை புத்தகத்தை வினியோகித்துள்ளார். இவர்கள் புதிதாக எதையும் செய்யவில்லை. அதேபோன்று, நாட்டிற்கும், மாநிலத்திற்கும் தேசிய கல்வி திட்டம் தேவையில்லை. மக்கள் ஏற்கனவே கற்றறிந்தவர்களாகவும் அறிவாளிகளாகவும் உள்ளனர். கொள்கையை மாற்றுவதற்கான சூழ்நிலைகள் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.