கோட்டயம்:
கேரளாவில் கே ரெயில் சில்வர் லைன் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில கிராமங்களைச் சேர்ந்த மக்களும் நிலம் கைகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கோட்டயம் மாவட்டத்தில் கே ரெயில் திட்டத்திற்கு அதிகாரிகள் நிலம் கையகப்படுத்த சென்ற போது, அவர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது. அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கிராம மக்கள் பலரை கைது செய்தனர். எனினும் ஆங்காங்கே போராட்டம் நடைபெறுகிறது.
மாநில பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டதுடன், அவை நடவடிக்கைகளை புறக்கணித்தனர்.
இந்நிலையில், கே ரெயில் திட்டத்திற்கு எதிராக கோட்டயத்தில் போராட்டம் நடத்தும் மக்களை, வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளிதரன் இன்று சந்தித்தார். அப்போது, இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று மத்திய மந்திரி கூறினார்.
மேலும் இந்த திட்டம் சூழலியல் பிரச்சினைகளை உருவாக்கி, பலரை வீடற்றவர்களாக ஆக்கும். மாநில அரசு இதில் முனைப்பு காட்டினால், பாஜக மக்களைத் திரட்டி அத்தகைய முயற்சிகளை முறியடிக்கும் என்றும் முரளிதரன் கூறினார்.