திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த களமசேரி பகுதியில் அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.
இந்த பணியில் ஏராளமான வெளிமாநில தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இங்கு மண் தோண்டும் பணி நடந்தது.
இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 25 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தோண்டப்பட்ட மண் சரிந்து விழுந்தது.
இதில் 7 தொழிலாளிகள் மண்ணுக்கு அடியில் சிக்கி கொண்டனர். இதனை கண்ட சக தொழிலாளிகள் அவர்களை மீட்க முயன்றனர். இதில் 2 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். அவர்கள் உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
4 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். ஒருவரது உடலை தேடும்பணி நடந்து வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ஜாபர் மாலிக் தெரிவித்தார்.
இதற்கிடையே கட்டுமான பணிகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மண் சரிந்து விழுந்தது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.