சென்னை:
கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் பல சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறி, சயான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, நீலகிரி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சாட்சி விசாரணையை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும் என்றார்.
மேல் விசாரணைக்கு பிறகே சாட்சி விசாரணையை தொடங்க முடியும், எனவே சாட்சி விசாரணையை தொடங்க அனுமதிக்க கூடாது என்று அவர் வாதிட்டார்.
இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி ஆகியோரையும் சாட்சிகளாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதால் அவர்கள் இந்த மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, தற்போதைய சூழலில் இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடந்து வருவதால், சாட்சி விசாரணை நடத்தும்படி உத்தரவிட முடியாது என்று சொல்லி, மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.