புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் சரண கோஷம் முழங்க பம்பை நதியில் ஆராட்டு திருவிழா நடைபெற்றது.
கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத வழிபாட்டுக்காக கடந்த எட்டாம் தேதி நடை திறக்கப்பட்டு, ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் ஆராட்டு திருவிழா தொடங்கியது.
ஆராட்டு விழாவுக்காக மேளதாளம் முழுங்க ஐயப்பனின் விக்ரகம் ஊர்வலமாக பம்பை நதிக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பம்பை நதியில் ஆராட்டு விழா நடந்தது. இதைத் தொடர்ந்து ஆராட்டு விழா கொடி இறக்கப்பட்டது, இந்த ஆராட்டு விழா நிகழ்வினைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்த சூழலில் சபரிமலை கோயிலில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு இன்று தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 10 மணிக்கு சபரிமலை கோயிலில் அய்யப்பனுக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM