தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் கார் ஒன்று குளத்துக்குள் பாய்ந்த நிலையில், காரிலிருந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் மாருதி ஸ்விப்ட் காரில் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை கிருஷ்ணமூர்த்தியே ஓட்டிச் சென்றுள்ளார்.
கருங்குளம் அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரம் உள்ள குளத்துக்குள் பாய்ந்தது. குளம் முழுவதும் நிரம்பி இருந்த அமலைச் செடிகளுக்கு நடுவே கார் சிக்கிக் கொண்ட நிலையில், தகவலறிந்து வந்த போலீசார், காருக்குள் சிக்கியிருந்த 3 குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
கிருஷ்ணமூர்த்தி முந்தைய நாள் இரவு சரியாக தூங்காமல் இருந்ததாகவும் கார் ஓட்டும்போது கண் அயர்வு ஏற்பட்டு தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.