புதுடெல்லி: சில படங்கள் மாற்றத்தை தூண்டும், ஆனால் தி காஷ்மீர் பைல்ஸ் வெறுப்பைத் தூண்டுகிறது என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் கிளர்ச்சியின்போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு நாம் உதவ வேண்டும், அதேசமயம் அங்குள்ள முஸ்லிம்களை மோசமாக சித்தரிப்பது பண்டிட்டுகளுக்கும் உதவாது என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
‘‘சில படங்கள் மாற்றத்தை தூண்டும். ஆனால் தி காஷ்மீர் பைல்ஸ் வெறுப்பைத் தூண்டுகின்றன. உண்மை, நீதி, மறுவாழ்வு, நல்லிணக்கம், அமைதிக்கு வழிவகுக்கும். இதுபோன்ற பிரச்சாரம் உண்மைகளைத் திரிக்கிறது.
இந்த படம் வரலாற்றைத் திரித்து கோபத்தைத் தூண்டி வன்முறையை ஊக்குவிக்கிறது. நாட்டின் நலம் விரும்புபவர்கள் காயங்களை குணப்படுத்துகிறார்கள். சில பிரச்சாரகர்கள் பயத்தையும் தப்பெண்ணத்தையும் பிரித்து ஆட்சி செய்ய பயன்படுத்துகிறார்கள்.’’ எனக் கூறியுள்ளார்.