சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் மார்ச் 13-ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களைப் பதவி விலகுமாறு கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் அமைப்புரீதியாகச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ஜி-23 காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து காந்தி குடும்பத்தினர் விலகியிருக்க வேண்டும் என்று ஜி 23 குழுவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் கூறியிருப்பது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, மூத்த அரசியல்வாதிகள் கபில் சிபல், ஆனந்த் சர்மா ஆகியோர் அடங்கிய ஜி -23 தலைவர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதன் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், “பாஜகவை எதிர்க்க, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது அவசியம். 2024 -ல் நம்பகமான மாற்றுக்கு வழி வகுக்கும் ஒரு தளத்தை உருவாக்க, காங்கிரஸ் கட்சி ஒரே எண்ணம் கொண்ட சக்திகளுடன் இணைவது தொடர்பான ஆலோசனையைத் தொடங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, நேற்று (18 மார்ச்) கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தைச் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குலாம் நபி ஆசாத், “சோனியா காந்தியை யாரும் ராஜினாமா செய்யச் சொல்லவில்லை. அவர் காங்கிரஸ் தலைவர், நாங்கள் கட்சியின் பொறுப்பு தலைவர்கள், காங்கிரஸின் மறுசீரமைப்பு அமைப்புக்காக அளிக்கப்படும் கருத்துகள் கட்சிக்கானது.
தலைமை குறித்து எங்களுக்கு எந்த கேள்வியும் இல்லை, சோனியா காந்தி பதவியை விட்டு விலக முன்வந்தபோது நாங்கள் அனைவரும் அதை வேண்டாம் எனத் தடுத்தோம். எனவே கட்சி எப்போது அமைப்புத் தேர்தலுக்குச் செல்லும் என்பது தொடர்பாக பிறகு ஆலோசிக்கப்படும். அப்போது அடுத்த கட்ட முடிவுகள் செய்யப்படும்” எனக் குறிப்பிட்டார்.