ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா , அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஐம்முவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீரில் கடந்த 2018ம் ஆண்டு, 417-ஆக இருந்த தீவிரவாத சம்பவங்களின் எண்ணிக்கை, 2021ம் ஆண்டில் 229-ஆக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
2018ம் ஆண்டில் 91 ஆக இருந்த வீரர்களின் பலி எண்ணிக்கை, 2021ம் ஆண்டில் 42 ஆக குறைந்துள்ளது குறித்து குறிப்பிட்ட மத்திய உள்துறை மந்திரி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு படை அதிகாரிகளை பாராட்டினார்.
தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு புகலிடமாகவும், நிதி உதவி பெறும் இடமாகவும் இருக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.
தீவிரவாதத் தேடுதல் நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க, போதைப் பொருள் தடுப்புப் பிரிவை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் மத்திய உள்துறை மந்திரி தெரிவித்தார்.
எல்லையில் தீவிரவாத ஊடுருவல் சம்பவம் நடைபெறாததை உறுதி செய்யுவும், அமைதியான மற்றும் செழிப்பான ஜம்மு-காஷ்மீர் மீண்டும் உருவாகவும் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்… காஷ்மீர் பைல்ஸ் படம் வெறும் கட்டுக்கதை: உமர் அப்துல்லா குற்றச்சாட்டு