ப்ரசெல்ஸ்: வகுப்பறையில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை 30 ஆண்டுகளுக்குப் பின் கத்தியால் 101 முறை குத்தி கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் மாகாணத்தை சேர்ந்தவர் மரியா வெர்லிண்டன் 59. ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான இவர் 2020ம் ஆண்டு நவ.20ல் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்த பணம் நகை எதுவும் திருடு போகவில்லை. போலீசார் பல கோணங்களில் விசாரித்தும் குற்றவாளி பற்றிய துப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் உவென்ட்ஸ் என்ற 37 வயது இளைஞர் சமீபத்தில் தன் நண்பரிடம் ஆசிரியை மரியாவை தான் கொலை செய்ததை கூறியுள்ளார். இதையடுத்து போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உவென்ட்சை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். போலீசாரிடம் உவென்ட்ஸ் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
நான் 1990ல் பள்ளியில் படித்த போது ஆசிரியை மரியா வெர்லிண்டன் வகுப்பறையில் என்னை அவமானப்படுத்தினார். அவர் கூறிய வார்த்தைகளுக்கு அப்போது எனக்கு அர்த்தம் தெரியவில்லை. ஆனால் அந்த வார்த்தைகளை என்னால் மறக்க முடியவில்லை. பின்னாட்களில் அதன் அர்த்தம் உணர்ந்து மிகவும் அவமானமும் மன உளைச்சலும் அடைந்தேன். அதனால் தான் மரியாவை என் ஆத்திரம் தீரும் அளவுக்கு 101 முறை கத்தியால் குத்தி கொலை செய்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட உவென்ட்ஸ் ஆதரவற்றவர்கள் மீது மிகுந்த இரக்கம் கொண்டவர் என்றும் அவர்களுக்கு நிறைய உதவிகள் செய்வார் என்றும் அவரது நண்பர்கள் கூறினர்.
Advertisement