புதுடெல்லி: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர், இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹3.2 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளார். கொரோனா தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இந்தியா-ஜப்பான் இடையோன உச்சிமாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில், ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா கடந்த அக்டோபரில் பதவியேற்ற பின், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி உச்சி மாநாட்டில் பங்கேற்க, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.அதை ஏற்று, 14வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க கிஷிடா 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று மாலை இந்தியா வந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் வரவேற்றனர். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடி – கிஷிடா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள், தொழில் உற்பத்தி அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து, இருதரப்பும் ஒத்துழைப்பை பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்தும் வகையில் ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது தொடர்பாக ஜப்பான் பிரதமர் கிஷிடா அளித்த பேட்டியில், ‘‘அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ₹3.2 லட்சம் கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார். ஜப்பான் தற்போது இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புல்லட் ரயில் திட்டத்திற்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது. மோடி உடனான சந்திப்புக்கு பின் இன்று காலை 8 மணிக்கு, ஜப்பான் பிரதமர் கிஷிடா கம்போடியாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.ரஷ்யா தாக்குதல் ஏற்க முடியாதது; ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், ‘‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.இந்தோ-பசிபிக்கில் அமைதிக்கு உதவும்: இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின் பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்தியா-ஜப்பான் உறவுகளை ஆழப்படுத்துவது இரு நாடுகளுக்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் உதவும்’’ என்று கூறினார்.