தமிழக சட்டப்பேரவையில் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்.!

தமிழகத்தில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடிக்கு நிதி ஒதுக்கீடு, டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வர ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில், வரவு – செலவு திட்ட மதிப்பீட்டில் ஒட்டுமொத்த வருவாய் 2 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாயாகவும், மொத்த செலவினங்கள் 2 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 52 ஆயிரத்து 781 கோடி ரூபாயாக உள்ளது.

சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு 500 கோடி ரூபாயும், வானிலை முன்கணிப்புக்கான கருவிகள், அதிவேகக் கணினிகள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பயிர்க்கடன், நகைக்கடன், சுய உதவிக்குழுக் கடன் ஆகியவற்றின் தள்ளுபடிக்கு மொத்தம் 4131 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரி நீர் கடைமடை பகுதி வரை சென்றடைய டெல்டா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் 4 ஆயிரத்து 964 கிலோ மீட்டர் தூரமுள்ள கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள 149 சமத்துவ புரங்களை சீரமைக்க 190 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 213 பி.எஸ்.-6 ரக புதிய டீசல் பேருந்துகளையும், 500 புதிய மின் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்பட 19 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. குடிநீர் வசதிக்கான ஜல் ஜீவன் திட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் 3 ஆயிரம் கோடி ரூபாயும், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு 4 ஆயிரத்து 848 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.