2022 – 23 தமிழக பட்ஜெட் – வெறும் அறிவிப்பு ஆட்சியாக இல்லாமல், அதனை நிறைவேற்றும் ஆட்சியாக இருந்தால் வரவேற்கதக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-23 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டிலோ அல்லது வேறு வெளிநாடுகளிலோ கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும், 21 இந்திய, உலக மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் வெளியிடப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கதக்கவையாக இருந்தாலும் கூட, மக்களுக்கான முக்கிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
குறிப்பாக தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல் டீசல், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, கல்விக் கட்டணம் ரத்து, அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை திமுக அரசு வஞ்சித்துள்ளது. மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறாதது அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது.
ஏற்கனவே பல லட்சம் கோடி கடனில் தமிழகம் மூழ்கியுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல், மேலும் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி இருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல். வெறும் அறிவிப்பு ஆட்சியாக இல்லாமல், அதனை நிறைவேற்றும் ஆட்சியாக இருந்தால் வரவேற்கதக்கது. மொத்தத்தில் தமிழக பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்த அறிவிப்பாக உள்ளது.