தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி வரை மொத்தமுள்ள 3,864 கிலோ மீட்டர் அகல ரயில் பாதையில், 3,064 கிலோ மீட்டர் வரை மின்மயமாக்கப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பாரிவேந்தர் எம்.பி ரயில்வே துறையின் பணிகள் குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்விகளை எழுப்பினார். அதில், நாடு முழுவதும் ரயில்வே இருப்புப் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறதா எனக் கேட்டிருந்தார். மேலும், நாடு முழுவதும் ரயில்வே இருப்புப் பாதைகளை நூறு சதவிகிதம் வரை மின்மயமாக்கும் பணிகளை முடிக்க, ரயில்வே துறை கால நிர்ணயம் ஏதேனும் வைத்திருக்கிறதா? அப்படி இருந்தால் எப்பொழுது முடிக்கப்படும் என்ற தகவலை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தமிழகத்தில் இதுவரை எத்தனை தூரத்திற்கு அகல ரயில்வே பாதைகளில் மின்மயமாக்கும் பணிகள் முழுமையாகவோ, பாதியாகவோ நடந்து முடிந்திருக்கின்றன என்றும், இந்த பணிகள் அனைத்தும் எப்பொழுது முழுமையாக முடியும் என்றும் பாரிவேந்தர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அகல ரயில் பாதைகளை மின்மயாக்கும் பணிகளை ரயில்வேதுறை வேகமாக நடத்திவருவதாக தெரிவித்தார். கடந்த 2007 முதல் 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 4,337 கிலோ மீட்டர் தூர அளவிலா ரயில்வே பாதைகள் மின்மயாக்கப்பட்டிருந்த நிலையில், 2014-2021 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இது 455 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் 1 ஆம் தேதி வரை மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 864 கிலோ மீட்டர் தூர அகல ரயில் பாதைகளில் 3 ஆயிரத்து 64 கிலோ மீட்டர் தூர பாதைகளில் மின்மயமாக்கும் பணிகள் முடிந்திருப்பதாகவும், எஞ்சிய ரயில் பாதைகளில் ஒவ்வொரு கட்டமாக பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM