கொரோனா பரவல் குறைந்துவருவதன் காரணமாக திருமலை திருப்பதிக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் சராசரியாக தினமும் அறுபத்தைந்தாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான முந்நூறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்களை விநியோகிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதன்படி ஏப்ரல் ஒன்றாம் தேதிமுதல் முந்நூறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் நாள் ஒன்றுக்கு முப்பதாயிரமும் (30,000) சர்வ தரிசன டிக்கெட்கள் நாள் ஒன்றுக்கு முப்பதாயிரமும் (30,000) விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தேவஸ்தானத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம், முந்நூறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் வழக்கம்போல இணையம் மூலம் விற்பனை செய்யப்படும். ஏப்ரல் மாதத்துக்கான டிக்கெட்கள் மார்ச் 21-ம் தேதியும், மே மாதத்துக்கான டிக்கெட்கள் மார்ச் 22-ம் தேதியும், ஜூன் மாதத்துக்கான டிக்கெட்கள் மார்ச் 23-ம் தேதியும் விநியோகிக்கப்பட இருக்கின்றன.
இதன் மூலம் குறைந்தது அறுபதாயிரம் பேர் திருமலையில் தரிசனம் செய்வார்கள். இது தவிர்த்து ஏப்ரல் 1-ம் தேதி முதல் அர்ஜுத சேவா டிக்கெட்களும் வழங்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட்கள் இணையம் மூலம் வழங்கப்படும் என்றும் தரிசனம் செய்ய பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் என்றும் கோயிலின் செயல் அதிகாரி தர்மா ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பௌர்ணமி கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. மாலை ஏழு மணி முதல் ஒன்பது மணிவரை மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
இன்று சனிக்கிழமை என்பதால் திருமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அலிபிரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.