புதுடெல்லி: தென் கிழக்கு ஆசியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சல், தீவிர சுவாசபிரச்சினை பரவல் உள்ளதா என்பதை கண்காணிக்கவேண்டும் என்று மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வேகமெடுத்த கரோனா பரவல் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தான் அதிகமாக பரவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் முதலில் உருவான சீனாவின் வூஹான் நகரில் அதிகபட்சமாக 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதால் 30 லட்சம் பேர் வசிக்கும் நகரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் நகரிலும் ஒமைக் ரானால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இந்த பரவலை அடுத்து, அமெரிக்காவில் அதிக வைரஸ் பரவல் நிகழலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு கரோனா உச்சத்தில் இருந்தபோது,அதிகபட்சமாக ஒரே நாளில் 3,500 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் கூறியுள்ளதாவது:
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசப் பகுதிகளில் காய்ச்சல்போன்ற நோய் பரவுதல், தீவிர சுவாச நோய்த் தொற்று உள்ளதா என்பது குறித்து கண்காணிக்கவேண்டும். இதற்காக சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் கிராமம் கிராமமாக பரிசோதனையை நடத்தவேண்டும்.
காய்ச்சல் உள்ளவர்கள், தீவிரசுவாச நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு கரோனா பாதிப்பும் அதிகம்உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்து கரோனாபரவலைத் தடுக்க வழிமுறைகளைக் கடை பிடிக்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கைவிடக் கூடாது.
வைரஸ் பரிசோதனை, சிகிச்சை, தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கரோனாபாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். கரோனா உருமாற்றம் பற்றி தெரிந்து கொள்ள பரிசோதனை செய்ய வேண்டும்.
போதுமான விழிப்புணர்வு
போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், முகக்கவசம் அணிதல், மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்தல், அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
– பிடிஐ