திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் வாவி லாலா பகுதியை சேர்ந்தவர் பிரசாத். அப்பகுதியில் இவருக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது.
அங்கு குரங்குகள் தொல்லை அதிக அளவில் இருப்பதால் அவற்றை விரட்டுவதற்காக பிரசாத் ஆன்லைன் மூலமாக துப்பாக்கி வாங்கி பயன்படுத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய பண்ணை வீட்டை சுற்றிலும் மின் வேலி அமைத்தார். இதனால் குரங்குகள் நடமாட்டம் குறைந்தது.
இதனால் அவரது தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்யும் நாகராஜ் என்பவர் வீட்டில் துப்பாக்கியை வைத்திருந்தார். நேற்று முன்தினம் நாகராஜ் வீட்டிற்கு அவரது உறவினர்கள் சிலர் வந்தனர்.
அப்போது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுவர்கள் பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் 17 வயது சிறுவன் விளையாட்டாக துப்பாக்கி விசையை இயக்கினார்.
அப்போது துப்பாக்கியில் இருந்து சீறிப் பாய்ந்த குண்டு எதிரே வந்த நாகராஜின் உறவினரின் மகள் ஜான்வி (வயது 4) என்ற சிறுமியின் தலையில் பாய்ந்தது. குண்டு பாய்ந்ததில் சிறுமியின் தலையில் இருந்து ரத்தம் வெளியேறி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
சிறுமியை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து பிரசாத் மற்றும் துப்பாக்கியால் சுட்ட 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.