சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், “குருவிக்காரன் குழுவினருடன் இணைந்த நரிக்குறவன்” சமூகத்தினரை, தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, ஒன்றியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் மத்திய அரசின் கடிதத்தின் மூலம் தெரிவித்திருந்ததை, இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
மேலும், வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965 ஆம் ஆண்டிலும், பாராளுமன்றக் கூட்டுக்குழு 1967 ஆம் ஆண்டிலும், இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தன என்றும், நரிக்குறவர்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சமூகங்களில் ஒன்று என்றும், பழங்குடியினர் பட்டியலில் அவர்களைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்களாவார்கள். இது தொடர்பாக பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தும், இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.