தாங்கள் பாஜக பி-டீம் அல்ல என்றும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளதாகவும் ஓவைசியின் கட்சி எம்.பி இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ் தோப்பை அவரது இல்லத்திற்கு சென்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிம் (AIMIM) கட்சி எம்பி இம்தியாஸ் ஜலீல் சந்தித்தார். சந்திப்புக்கு பின்னர் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி ஆட்சியில் அங்கம் வகிக்கும் என்சிபி மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க ஏஐஎம்ஐஎம் தயாராக உள்ளது என்று கூறினார். “ஏஐஎம்ஐஎம்-முஸ்லீம் வாக்குகளைப் பிரிப்பதாகக் கூறி எங்களால் பாரதிய ஜனதா வெற்றி பெறுகிறது என்று எப்போதும் குற்றம் சாட்டப்படுகிறது. நாங்கள் கூட்டணிக்கு தயாராக இருக்கிறோம்,” என்று AIMIM இன் மகாராஷ்டிர பிரிவின் தலைவர் இம்தியாஸ் ஜலீல் எம்.பி தெரிவித்தார்.
“இவை ஏஐஎம்ஐஎம் மீதான வெறும் குற்றச்சாட்டுகளா அல்லது அவர்கள் (காங்கிரஸ் மற்றும் என்சிபி) எங்களுடன் கைகோர்க்கத் தயாரா என்பதை இப்போது பார்க்க விரும்புகிறோம். NCP மற்றும் காங்கிரஸ் மதச்சார்பற்றவர்கள், அவர்களுக்கும் முஸ்லிம்களின் வாக்குகள் வேண்டும் என்கிறார்கள். அவர்களுடன் கைகோர்க்க நாங்களும் தயாராக இருக்கிறோம். நாட்டிற்கு அதிகபட்ச சேதத்தை பாஜக செய்துள்ளது. அவர்களை தோற்கடிக்க நாங்கள் அனைத்தையும் செய்ய தயாராக உள்ளோம்” என்று ஜலீல் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM