நகைச்சுவை நடிகர்களில் இசையமைக்கத் தெரிந்தவர் என்ற பெருமை மதன்பாப்பிற்கு உண்டு. ஒரு காலத்தில் பாக்ஸராகவும் இருந்திருக்கிறார். கே.பாலசந்தரின் கண்டுபிடிப்புகளில் ஒருவர். ஏ.ஆர்.ரஹ்மானும் இவரது இசைக்குழுவில் வாசித்திருக்கிறார்… மீதியை அவரிடமே கேட்போம்.
“எங்க வீட்டுல நான் எட்டாவது புள்ள. காமெடியா சொல்றதா இருந்தா வீட்ல இருந்து நான் தொலைஞ்சு போனாலே, என்னை கண்டுபிடிக்கவே ரெண்டு நாள் ஆகிடும். ஒரு காலத்துல ஃபிட்னஸ்க்காக கோல் சண்டை, பானா, சூரி கத்தி, பாக்ஸிங்னு பல கலைகள் விரும்பி கத்துக்கிட்டேன். அப்ப நான் ஹெவி வெயிட் பாக்ஸர். ‘சார்பட்டா பரம்பரை’யில நானும் ஒருத்தன். இதை ஒருமுறை பா.இரஞ்சித் சார்கிட்ட சொன்ன போது, ஆச்சரியமானார். “முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா, அதுல உங்களையும் நடிக்க வச்சிருப்பேனே”னு சொன்னார்.
பாக்ஸிங் பிராக்டீஸ் பண்றப்ப பச்சையாவே 28 முட்டைகள் குடிப்பேன். ‘சார்பட்டா’ படத்துல பார்த்த கோச்சுகள் எல்லாருமே என்னோட இருந்தவங்கதான். இடையே கிடார் வாசிக்கவும் வகுப்புகள் போயிட்டிருந்தேன். ஒருத்தர் ஓசியில கத்துக்கொடுத்தார். கத்துக்கறது ரொம்ப பிடிக்கும். மிருதங்கமும் கத்துக்க ஆரம்பிச்சேன். ஏன்னா, ஒரு விஷயத்தை புதுசா கத்துக்கறது வாழ்க்கையில ரொம்ப சிறந்தா விஷயம். Learning is the best friend. எப்பவுமே நாம ஒரு Glass மாதிரி இருக்கணும். Mirror மாதிரி இருக்ககூடாதுனு நினைப்பேன். ‘தெனாலி’யில நான் சிரிச்சுக்கிட்டே எல்லாரையும் அழ வைப்பேன். ரவிக்குமார் சொன்னதை அப்படியே பண்ணினேன்.”
ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை ‘நீங்கதான் அவர் குரு’னு சொல்லியிருந்தாரே… கவனிச்சீங்களா?
“ரஹ்மான் அப்பவே புத்திசாலி. என்னோட ஒர்க் எதிலோ அவர் இம்ப்ரஸ் ஆகியிருக்கார். அதனாலதான் நான் அவரோட குருன்னு சொல்லியிருக்கார். இந்த விஷயத்தைக் கூட கே.எஸ்.ரவிகுமார் சார்தான் என்கிட்ட சொன்னார். ரஹ்மான் என்னோட சிஷ்யன்னு ஒரு இடத்துல கூட நான் சொன்னதில்ல. அவர் என்கிட்ட நிறைய வாசிச்சிருக்கார்… Relevant Thinking இல்லாமல் Lateral Thinking உண்டு. அதிலும் லேட்டரல் திங்கிங் எப்பவும் என்கிட்ட உண்டு. அது அவருக்குப் பிடிச்சிருக்கும். அதனாலதான் அப்படிச் சொல்லியிருப்பார்னு நினைக்கறேன்.”
வடிவேலுவை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவரோடு பல படங்கள்ல சேர்ந்து நடிச்சிருக்கீங்க. அந்த அனுபவம் பற்றி…
“ஒரு சகாப்ததை ஏற்படுத்துறது அவ்ளோ எளிதான விஷயமில்ல. நாகேஷ், கவுண்டமணிக்கு அடுத்ததா வடிவேலுனு பெயர் வாங்கினார். ஒரு தனிமனிதனா இப்படி பெயர் வாங்குறது சாதாரண விஷயமில்ல. அவரோட நடிச்சிருக்கேன். அதிலும் கிராமத்துக்காரனா அவர் பண்றது, அவ்ளோ கஷ்டப்பட்டு உழைப்பார். ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்துல எண்ணெயில வழுக்கி விழுவார். நிஜமாகவே எண்ணையில காலை வச்சு, வழுக்கி விழுந்தார். இன்னொரு காமெடியில ஒருத்தர் சேர்ல உட்கார்ந்து பேப்பர் படிக்கறப்ப… ‘நீயும் சாஞ்சிடு… நானும் சாயுறேன்’னு சேர்ல இருந்து கீழே விழுவார். அவங்க பேப்பர் படிக்கிறாங்க… நீங்களும் பேப்பர் படிக்கிறீங்க – அந்த காமெடியை பாருங்க, தெரியும். இப்படி ரிஸ்க் எடுத்து பண்ணுவார்.
இதுமட்டுமில்ல. மத்தவங்களை பண்ண வச்சும் ரசிப்பார். அதனாலேயே அவரை ரொம்ப பிடிக்கும். அவரை மாதிரியே அவரோட முகச்சாயல்ல அதே மதுரையில இருந்து எத்தனை பேர் கிளம்பி வந்தாங்க… ஒவ்வொருத்தரும் சினிமாவுலயும் ஏதேதோ பண்ணினாங்க. ஆனா, யாராலேயும் அவரை மாதிரி வரமுடியலையே, ஏன்? ‘வின்னர்’ சமயத்துல அவருக்கு நிஜமாகவே கால்ல அடிபட்டிருந்தது. அவர் அதையே ஒரு பாடிலாங்குவேஜ் ஆக மாத்திக்கிட்டார். உண்மையிலேயே அவர் ஒரு பெரிய ஜீனியஸ்தான். அதுல சந்தேகமில்ல.”
படங்களுக்கு இசையமைக்கற ஐடியா இருக்குதா? ரெடியா இருக்கீங்களா?
“என்ன மாதிரி பந்து வந்து விழுந்தா, உன்னால பேட் பண்ண முடியும்னு எந்த பேட்ஸ்மேன்கிட்டேயாவது கேட்டிருக்கோமா? எந்தப் பந்தாக இருந்தாலும் அதில் சிக்ஸர் அடிக்கணும், பவுண்டரி அடிக்கணும். அதுதானே கரெக்ட்! படங்களுக்கான இசையமைப்பாளர் வாய்ப்பு வந்தாலும் என் முயற்சி முழுமையாக இருக்கும்.”