ஹெல்சிங்கி:
நார்வேயின் போடோ நகரின் தெற்கில் உள்ள பெயார்னில் நேட்டோ கூட்டுப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோரே, விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த
விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வேயில் ஆண்டுதோறும் நேட்டோ படையினர் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டு 27 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30,000 துருப்புக்கள், 220 விமானங்கள் மற்றும் 50 கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேட்டோ உறுப்பினர் அல்லாத பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளும் பங்கேற்றுள்ளன. மார்ச் 14ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முடிவடைகின்றன.