நிரம்பும் பிணவறைகள்… இரயில்களில் கடத்தப்படும் சடலங்கள்: திணறும் ரஷ்ய துருப்புகள்


உக்ரைனின் அண்டை நாடான பெலாரசில் பிணவறைகள் நிரம்பி வருவதாகவும், இரவு நேரங்களில் மட்டும் இரயில், பேருந்துகளில் ரஷ்ய வீரர்களின் சடலங்களை உக்ரைனில் இருந்து கொண்டு செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெலாரஸ் நாட்டின் மசீரில் உள்ள பிணவறை சடலங்களால் நிரம்பி வழிகிறது என்று நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.
அங்கிருந்து ரஷ்ய இரயில்களில் உடல்களை அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குவியல் குவியாக சடலங்களை இரயில் நிலையத்தில் பார்க்கும் மசீர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் எனவும், அந்த காட்சிகளை காணொளியாக பதிவு செய்யும் மக்களை பெலாரஸ் இராணுவத்தினர் மிரட்டி வருவதாகவும் கூறுகின்றனர்.

இதனிடையே, உக்ரைன் எல்லையில் இருந்து 60 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மருத்துவமனைகளும் காயமடைந்த ரஷ்ய வீரர்களால் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, பெலாரஸ் எல்லையில் புதிதாக ரஷ்ய இராணுவ மருத்துவமனைகள் அவசர அவசரமாக நிறுவப்பட்டுள்ளதாகவும், காயம்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 13ம் திகதி நிலவரப்படி பெலாரஸின் ஹோமல் பகுதியில் இருந்து 2,500 க்கும் மேற்பட்ட வீரர்களின் சடலங்கள் ஏற்கனவே ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

மசீர் பகுதியில் உள்ள பிணவறைகளில் ரஷ்ய வீரர்கள் மட்டுமின்றி செச்சினியா வீரர்களின் சடலங்களும் நிரம்புவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பிறகு மொத்தம் 14,000 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், ரஷ்ய தரப்பில் வெறும் 500 வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
மட்டுமின்றி, உக்ரைனில் எதிர்கொள்ளும் உண்மையான இறப்பு எண்ணிக்கையை மறைக்க இறந்த வீரர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவில்லை என்று புடின் மீது முன்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.