நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் நகராட்சி துணைச் சேர்மன் தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது.கடலுார் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் பதவி தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் கிரிஜா திருமாறன் போட்டியிட்டார். ஆனால் தி.மு.க., ஜெயந்தி ராதா கிருஷ்ணன் நகர செயலாளர் மணிவண்ணன் ஒத்துழைப்புடன் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனால் அன்று 10 மணி நேரத்திற்கு மேலாக வி.சி., கட்சியினர் மறியல் செய்தனர். அமைச்சர் கணேசன் துணை சேர்மன் பதவியை வி.சி., கட்சிக்கு தருவதாக சமாதானம் செய்தார். அதில் கிரிஜா போட்டியிட்டார். ஆனால் தி.மு.க., நகர செயலர் மணிவண்ணன் மனைவி ஜெயபிரபா எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தமிழகத்தில் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற்ற தி.மு.க.,வினர் ராஜினாமா செய்ய வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதை அமைச்சர் கணேசன் கூறியும், ஜெயபிரபா ராஜினாமா செய்ய மறுத்தார். ஒரு வாரத்துக்கு பிறகு ஜெயபிரபா ராஜினாமா செய்தார். தற்போது காலியாக உள்ள அப்பதவிக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் யார் வெற்றி பெறுவர் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
Advertisement