புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் அமைச்சரவையில் இடம்பெறும் பத்து அமைச்சர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் கலவையாக இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் முதற்கட்ட அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 10 பேரும் இன்று(சனிக்கிழமை) பதவியேற்கவுள்ளனர். இதில் இரண்டு விவசாயிகள், மூன்று வழக்கறிஞர்கள், இரண்டு மருத்துவர்கள், ஒரு சமூக சேவகர், ஒரு பொறியாளர் மற்றும் ஒரு தொழிலதிபர் உள்ளிட்டோர் இந்த புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
அனைத்து பிராந்தியங்களுக்கும் பிரதிநிதித்துவம்:
தற்போது கேபினட் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேரும் பஞ்சாபில் உள்ள பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். பத்து பேரில் ஐந்து பேர் மால்வாவை சேர்ந்தவர்கள், நான்கு பேர் மஜாவை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் தோபா பகுதியை சேர்ந்தவர்.
இரண்டாவது அமைச்சரவை விரிவாக்கத்தில் மேலும் ஏழு பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னையும் சேர்த்து 18 பேருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம் அளிக்க முடியும் என முதல்வர் பகவந்த் மான் கட்சி எம்எல்ஏக்களிடம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். மீதமுள்ளவர்கள் பல்வேறு வாரியங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களாக ஆக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்து மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்த தலா ஒரு கேபினட் அமைச்சர் துணை முதல்வர்களாக நியமிக்கப்படுவார்கள் என தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM