சண்டிகர்: பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பஞ்சாப்பில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 தொகுதிகளை கைப்பற்றி, ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால், டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப்பிலும் அக்கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது. இக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான், கடந்த புதன்கிழமை முதல்வராக பதவியேற்றார். அன்றைய தினம் மானுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.இந்நிலையில், பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பகவந்த் மானின் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இம்மாநிலத்தில் முதல்வர் உள்பட 18 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம் பெற முடியும்.கடந்த முறை எம்எல்ஏ.க்களாக இருந்த ஆம் ஆத்மியின் மூத்த எம்எல்ஏ.க்களான ஹர்பால் சிங் சீமா, அமான் அரோரா உட்பட 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.