புதுடில்லி-அடுத்த மாதம் வரும், ‘பஞ்சாயத்து ராஜ்’ தினத்தன்று, பிரதமர் மோடி ஜம்மு – காஷ்மீருக்கு சென்று, வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.நம் நாட்டில், ஆண்டுதோறும் ஏப்ரல் 24ம் தேதி, பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், வெவ்வேறு மாநிலங்களுக்கு பயணித்து, அங்குள்ள பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதை, பிரதமர் மோடி வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த மாதம் வரும் பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று, பிரதமர் ஜம்மு – காஷ்மீருக்கு செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.ஜம்மு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.மேலும், தொழில் முதலீடுகளை துவக்கி வைக்கும் பிரதமர், சில வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஜம்முவில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை, ஜம்மு – காஷ்மீர் அரசுடன் ஆலோசித்த பின், மத்திய அரசால் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement