சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பராமரிப்பின்றியும் பலன் தருபவை பனை மரங்கள். பனை மரம் விதையிட்ட நாளை தவிர மற்ற எந்த நாளும் கவனிக்காமல் விட்டு விட்டாலும் தானாக வளர்ந்து பயன்தரும் என்று நாலடியார் குறிப்பிடுகிறது.
தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும் மொழியோடும் இணைந்துள்ளது என்பதற்கு சங்க இலக்கியங்களே சான்றாகும். தமிழ் மொழியின் ஆரம்ப கால ஊடகமாக பனை ஓலைகள் செயல்பட்டன.
தமிழ்நாட்டில் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. சுமார் 3 லட்சம் குடும்பங்கள் பனை ஓலைகள், நார் ஆகியவற்றை கொண்டு கூடை பின்னுதல், பாய் செய்தல், கயிறு திரித்தல் போன்ற தொழில்களை சார்ந்தும் 11 ஆயிரம் பனை தொழிலாளர்கள் நுங்கு, பதனீர் இறக்குதல் என பனை மரங்களை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
எனவே பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் கடந்த ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் இவ்வரசினால் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பேரவை தலைவர் கடந்த ஆண்டு தனது சொந்த முயற்சியால் 1 லட்சம் பனை விதைகளை இலவசமாக இத்திட்ட செயல்பாட்டிற்கு வழங்கினார்.
இனி வரும் 2022-23-ம் ஆண்டிலும் இந்த அரசு 10 லட்சம் பனை விதைகளை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கும். பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க பனை மரம் ஏறும் எந்திரங்கள், பனை வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், உபகரணங்கள் ஆகியவை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
பனை வெல்லம் தயாரிக்கும் பயிற்சியும், அதற்கான உபகரணங்களும், 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இது தவிர 100 பெண்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு பனை ஓலை பொருட்கள் தயாரிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
இவர்களுக்கு மூலப்பொருட்களை வழங்கி உற்பத்தி செய்யப்படும் பனை ஓலை பொருட்கள் மாநில மாவட்ட சங்கங்களினால் உருப்படி கூலி முறையில் வாங்கப்பட்டு தொடர் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். இத்திட்டம் 2 கோடியே 65 லட்சம் நிதியில் செயல்படுத்தப்படும்.
சிறந்த பனை ஏறும் எந்திரத்தை கண்டு பிடிப்பவருக்கு விருதும் வழங்கப்படும். மேலும் 2022-23-ம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் 25 லட்சம் பனை விதைகள் நடப்படும்.