முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி. இங்கு நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திரத் திருவிழா, மூன்றாம் படைவீடானமான திருஆவினன்குடிக் கோயிலில் மார்ச் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் சுவாமி தந்தப் பல்லக்கில் எழுந்தருளத் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. மாலையில் வெள்ளி யானை, ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் காவடி உள்ளிட்ட நேர்த்தி கடன்களைச் செலுத்தினர்.
பங்குனி உத்திரத் திருவிழாவின் ஆறாம் நாளில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்குத் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. திருமண உற்சவத்தில் திண்டுக்கல் மட்டுமில்லாது தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து சுவாமி திருக்கல்யாண கோலத்தில் வெள்ளி ரதத்தில் கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது. இன்று அதிகாலை தீர்த்தவாரிக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து திருஆவினன்குடிக்த்கு தந்த பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார். மாலை 4.45 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்டம் தொடங்கியது.
தேரோட்டத்தையொட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கிரிவல வீதிகளில் உற்சாகமாக அரோகரா கோஷத்துடன் ஆட்டம் பாட்டமாக சென்று முருகனை வழிபட்டனர். இன்று இரவு தங்கப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்வு நடக்கிறது. மார்ச் 21-ம் தேதி கொடி இறக்குதலுடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெற உள்ளது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகப் பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தற்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, திருஆவினன்குடி, மலைக்கோவில் மற்றும் பழநி நகர் முழுவதும் பக்தர்கள் வெள்ளம் காணப்பட்டது.
பழைய வத்தலக்குண்டு அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் சார்பில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பழநிக்கு காவடியுடன் பக்தர்கள் குடும்பம் குடும்பமாகப் பாதயாத்திராக வந்தனர்.
பழைய வத்தலக்குண்டு முருக பக்தர்கள் தங்கள் முன்னோர்கள் காட்டிய வழியில் பழைமை மாறாமல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி உத்திரத் திருநாளில் பழநிக்குப் பாதயாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சுமார் 450 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பாதயாத்திரை நிகழ்வில் தற்போது 89 ஆவது முறையாக பழைய வத்தலக்குண்டு முருக பக்தர்கள் காவடிகளுடன் பழநிக்குப் பாதயாத்திரை சென்றனர். இவ்வாறு பங்குனி உத்திரத் திருவிழாவின் போது பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு வத்தலகுண்டில் உள்ள முக்கிய கோயில்களில் அனைத்திலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பாதயாத்திரைக்கு அனுப்பி வைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.