பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெறவிருக்கும் வரையறுக்கப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் ராவல்பிண்டி நகரிலிருந்து லாகூர் நகருக்கு மாற்றப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் பதற்றங்களினால் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பது இதன் நோக்கமாகும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேய்க் ரசீட் அஹமட் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் எதிர்வரும் 29ம், 31ம், திகதிகளிலும் அடுத்த மாதம் 2ம் திகதியும் ஒருநாள் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததோடு, அடுத்த மாதம் 5ம் திகதி ரி-ருவன்ரி போட்டியும் நடத்தப்படவிருந்தது. ஆனால், அரசியல் காரணங்களைக் கருத்திற்கொண்டு இந்தப் போட்டிகள் அனைத்தும் லாகூர் நகரில் நடைபெறுமென பாகிஸ்தான் உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது.