பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் , நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்தநிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்களும் ஆளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது, வருகிற 28-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
பாகிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்தநிலையில், இம்ரான்கான் சரியாக அரசை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என சொந்த கட்சியினர் உட்பட பலரும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து ராஜா ரியாஸ் எம்.பி. கூறும்போது, “இம்ரான்கான் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறி விட்டார். அரசின் கொள்கைகளில் திருப்தியடையாத உறுப்பினர்களில் சிலர் ஒரு அணியாக இருக்கிறோம். மக்கள் அவர் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர்” என்றார். பாகிஸ்தானில் பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பது பாகிஸ்தான் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானில் மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. ஆனால் ஆளும் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர். எனினும் பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. ஆனால் தற்போது 24 பேர் அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.