பீகார் மாநிலத்தில் சபாநாயகர் விஜய் குமார் சின்காவின் சொந்தத் தொகுதியான லக்கிசராயில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் சபாநாயகருக்கும் காரசார விவாதம் நடைபெற்றது.
பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க-வை சேர்ந்த விஜயகுமார் சின்ஹா சபாநாயகராக பதவி வகிக்கிறார்.
பீகார் சட்டசபையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்க தொடங்கிய போது சபாநாயகர், அந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேறொறு தேதியை நிர்ணயித்தார்.
இது குறித்து பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு சபாநாயகர், ‘‘சபையை எப்படி நடத்துவது என்று சொல்லுங்கள்’’ என முதல்வரிடமே மீண்டும் கேள்வி எழுப்ப, முதல்வர் நிதிஷ் குமாருக்கும், சபாநாயகர் விஜய் சின்ஹா-வுக்கும், வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது, சபாநாயகர் அரசியலமைப்பை மீறுவதாக முதல்வர் நிதிஷ் குமார் குற்றம்சாட்டினார்.
லக்ஹிசராய் மாவட்டத்தை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பா.ஜ.க, ஆதரவாளர்கள் இருவரை கடந்த மாதம் கைது செய்தார். இந்த விவகாரத்தில் தான் சபாநாயகருக்கும் முதல்வருக்கும் மோதல் முற்றியது
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சபாநாயகர் விஜய் குமார் சின்ஹாவை அதிருப்திக்குள்ளாக்கிய அந்த மூத்த அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க-வுடனான கூட்டணியில் இருக்கும் முதல்வர் நிதிஷ் குமார் அந்த அதிகாரியின் இடமாற்ற உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார். இதனால் தற்காலிகமாக இந்த மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது
இந்த நிலையில், “நிதிஷ் குமார் முதலமைச்சராக இருக்கலாம், ஆனால் அரசு என வரும்போது, பாஜக தான் ஆட்சி செய்கிறது. முதல்வர் நாற்காலியை தக்க வைத்துக் கொள்ள விரும்பும் நிதிஷ் குமாரால், ஒரு மூத்த தலைவரை குறிப்பாக அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவரை அவமதித்தால் தப்பிக்க முடியுமா?. அதற்காக தான் இந்த சமாதான நடவடிக்கை” என எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்கிறது.