பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளிவைப்பு

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என 2018 ல் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இரு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டு ஜூலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.-யாக பொன் மாணிக்கவேலை நியமித்து, அவருக்கு தேவையான காவலர்கள், உட்கட்டமைப்பு, வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், 2018 நவம்பர் 30ம் தேதி பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற்றதையடுத்து, அவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான வசதிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை எனக் கூறி, அப்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி,  டிஜிபி ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக, பொன்மாணிக்கவேல் 2018 ஜூன் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
TS Anbu replaces Pon Manickavel as chief of Tamil Nadu Idol Wing- The New  Indian Express

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு குறித்து பதிலளிக்க அவகாசம் வழங்கக் கோரினார். அப்போது நீதிபதிகள் 2 ஆண்டுகளாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, இதுவரை அவமதிப்பாளர்கள் பதிலளிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு குறித்து விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டதுடன், தவறினால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்படும் என எச்சரித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.