சென்னையில் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive Against Drugs) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னைப் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் கடந்த 17.3.2022-ம் தேதி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த நபர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீஸார் சோதனை செய்தபோது அதில் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தன. அதுதொடர்பாக அவரிடம் விசாரித்த போது, அவர் வலி நிவாரண மாத்திரைகளை விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் கிஷோர் (23), சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. அவர் அளித்த தகவலின்படி சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கிஷோர்குமார் (20) என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். பின்னர் இருவரையும் போலீஸார் கைது செய்து வலிநிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் இருவருக்கும் சென்னை கொத்தவால்சவாடியைச் சேர்ந்த பூங்குன்றன் (26), விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துபாண்டி (23), ஆண்டிபட்டியைச் சேர்ந்த கோகுலன் (24), பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்கிற மித்ரா (22) ஆகியோர் உடல் வலி நிவாரண மாத்திரைகளை சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 7,125 வலி நிவாரண மாத்திரைகள், இரண்டு லேப்டாப், ஒரு ஐபேட், 9 செல்போன்கள், 4,41,300 ரூபாய், மூன்று பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் டெல்லியிலிருந்து கொரியர் மூலம் வலிநிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக மொத்தமாக வாங்கி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ராஜலட்சுமி, பப்ஜி விளையாடி வந்துள்ளார். அப்போது பூங்குன்றன் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் கல்லூரி மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விற்கலாம் என ராஜலட்சுமி திட்டமிட்டுள்ளார். உடனே பூங்குன்றன், கருக்கலைப்பு மாத்திரைகளோடு வலி நிவாரண மாத்திரைகளையும் விற்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் டெல்லியிலிருந்து வலி நிவாரண மாத்திரைகள், கருக்கலைப்பு மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கியிருக்கின்றனர். பின்னர் அதை தங்களுக்கு தெரிந்தவர்களிடம் விற்றுவந்துள்ளனர். இந்த மாத்திரைகளை சிலர் போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். வலி நிவாரண மாத்திரைகள், மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் விற்பது சட்டப்படி குற்றம். ஆனால் டெல்லியில் உள்ள கும்பலிடமிருந்து ராஜலட்சுமியும் பூங்குன்றனும் மாத்திரைகளை வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளனர்.
அதன்மூலம் இருவரும் லட்சக்கணக்கில் பணம் சம்பாத்திருக்கின்றனர். இதையறிந்த அவரின் உறவினரான முத்துப்பாண்டி, ராஜலட்சுமியைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் இந்தக் காதல் ஜோடி வலி நிவாரண மாத்திரைகள், கருக்கலைப்பு மாத்திரைகளை டெல்லியிலிருந்து வாங்கி விற்று வந்துள்ளது. டெல்லியிலிருந்து 100 மாத்திரைகளை 8,000 ரூபாய்க்கு வாங்கி, 10 மாத்திரைகளை 2,500 ரூபாய்க்கு ராஜலட்சுமி, முத்துப்பாண்டி, பூங்குன்றன் ஆகியோர் விற்றுள்ளனர். இவர்களிடம் 2,500 ரூபாய்க்கு மாத்திரைகளை வாங்கிய கோகுல், கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டோர் அதை 3500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரைக்கும் விற்றுவந்துள்ளனர்.
அந்தப்பணத்தில் விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி பந்தாவாக சுற்றித் திரிந்துள்ளனர். மேலும் கல்லூரி மாணவ, மாணவிகளை குறி வைத்து இந்தக் கும்பல் வலி நிவாரண, கருக்கலைப்பு மாத்திரைகளை விற்று ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். வாட்ஸ்அப் குரூப்கள் மூலம் மாத்திரைகள் விற்கபட்டுள்ளன. பணத்தையும் ஆன்லைன் மூலம் இந்தக் கும்பல் பெற்றுள்ளனர். மாத்திரைகள் வேண்டும் என்பவர்கள், ஆர்டர் கொடுத்ததும் கொரியர் மூலம் மாத்திரைகளை இந்தக் கும்பல் அனுப்பி வைத்துள்ளது. இந்தக் கும்பல், டெல்லியில் யாரிடமிருந்து மாத்திரைகளை வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். கைது செய்யப்பட்ட ராஜலட்சுமி, பட்டதாரி. இவர்தான் இந்தக் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்” என்றனர்.