புதுடெல்லி: உலகத்தின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடந்தாண்டை விட இந்தியா 3 இடங்கள் முன்னேறி இருக்கிறது. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் ஐநா. வெளியிட்டு வருகிறது. இதன்படி, ‘ஐநா உலக மகிழ்ச்சி அறிக்கை -2022’ நேற்று வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 146 நாடுகள் இடம் பெற்றுள்ளன. வழக்கம்போல், இந்தாண்டும் உலகின் நம்பர் 1 மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை பின்லாந்து பெற்றுள்ளது. தொடர்ந்து, 5வது ஆண்டாக முதலிடத்தை அது பெற்று வருகிறது, இதற்கு அடுத்து 2, 3வது இடங்களில் டென்மார்க், ஐஸ்லாந்து நாடுகள் உள்ளன.அமெரிக்கா 16வது இடத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டு இந்த பட்டியலில் இந்தியா 139வது இடத்தில் இருந்தது. இந்தாண்டு 3 இடங்கள் முன்னேற்றி, 136வது இடத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் 121வது இடத்தில் உள்ளது. வழக்கம் போல், இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் இப்போதும் கடைசி இடத்தை பிடித்துள்ளது.