சமீபகாலமாக அஜித்திடம் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. சில வருடங்களாகவே ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் விவரங்களை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிப்பார். அது மட்டுமின்றி, ஒரு பாலிஸியாக அரசியல் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய நிறுவனங்களில் கமிட் ஆவதைத் தவிர்த்து விடுவார். கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போதுக்கூட கட்சி தொடர்புடைய பலரும் அவரிடம் கால்ஷீட் கேட்ட போதும், அதை அன்பாக மறுத்திருக்கிறார். அதைப் போல ஒரு படத்தை முடித்துவிட்டு, சின்ன பிரேக் எடுத்த பிறகே அடுத்த படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிப்பார். அதை எப்போதும் கடைப்பிடித்து வந்தார்.
ஆனால், விதிவிலக்காக தற்போது சினிமா இருக்கும் சூழல் மற்றும் மார்க்கெட்டினால் சில விஷயங்களில் மட்டும் அவர் இறங்கி வந்திருக்கிறார் என்கிறார்கள். மூன்றாவது முறையாக போனி கபூருக்காக நடித்து வரும் அவர், அடுத்து லைகா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ‘வலிமை’க்கு அடுத்து அவர் நடிக்கும் 61-வது படத்தின் தகவலைத் தாண்டி, தன் 62-ம் படத்தின் கூட்டணியையும் தற்போதே அவர் அறிவித்திருப்பது எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்குகிறது.
இதற்கிடையே மீண்டும் இயக்குநர் சிவாதான் ‘அஜித் 63’-ஐ இயக்கப் போகிறார் என்ற பேச்சு தற்போது கிளம்பியிருக்கிறது. ‘அண்ணாத்த’க்குப் பிறகு சிவாவின் இயக்கத்தில் மீண்டும் அஜித் இணைவதாக இத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இயக்குநர் சிவா, சூர்யாவுக்காக ஒரு படத்தை இயக்குவார் என இதற்கு முன்பே செய்திகள் வெளியாகியிருந்தன. அதனால் இதில் எந்தப் படம் முதலில் எடுக்கப்படும், நிஜமாகவே அஜித் மீண்டும் சிவாவுடன் இணைகிறாரா போன்ற கேள்விகள் எட்டிப் பார்க்கின்றன. இது குறித்து இயக்குநர் சிவாவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.
“‘அண்ணாத்த’வுக்குப் பிறகு சூர்யா படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில்தான் இயக்குநர் சிவா தீவிரமாக இருக்கிறார். அஜித் – சிவா கூட்டணி நிச்சயம் மீண்டும் கைகோக்கும். ஆனால், அது ‘அஜித் 63’ ஆக இருக்குமா என்பதை மட்டும் இப்போதே உறுதியாகச் சொல்லிவிட முடியாது. சூர்யா இப்போது பாலாவின் படத்தில் கமிட் ஆகியுள்ளதால், அதன் படப்பிடிப்பில்தான் முதலில் பங்கேற்கிறார். பாலா படத்தை முடித்துவிட்டுதான், சிவாவின் படத்திற்கு சூர்யா தேதிகள் ஒதுக்குவார்.
ரஜினி, விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரிடமும் சிவா படங்கள் செய்ய வேண்டும் என்பது அஜித்தின் விருப்பம். அதை ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் அவரே சிவாவிடம் சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு தனி அன்பு அஜித்திற்கு சிவாவின் மேல் உண்டு. எனவே, அஜித் – சிவா கூட்டணி அடுத்தாண்டுக்குப் பிறகு மட்டுமே மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்கள்.
அநேகமாக அதை ‘அண்ணாத்த’ எடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என்றும் சொல்கிறார்கள்.