மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தால், கர்நாடகாவில்  உங்கள் குடும்பம் நடத்தும் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமா? – எடப்பாடி கே பழனிச்சாமி.!

மேக்கேதாட்டுவில் புதிய அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சியினை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவது குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களூருவில் 18.3.2022 அன்று நடைபெற்றது.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில், உடனடியாக காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டவேண்டும் என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரை தில்லியில் நேரில் சந்தித்து, கர்நாடகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவினை எடுத்துக் கூறி, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் அனுமதியை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

கர்நாடக அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை அனைத்தியதிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு இயத ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணையை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீருக்கு தடை ஏற்படும் என்பதை உணராத இந்த திமுக அரசு, மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ததற்கும், நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்தும் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் வாய் மூடி மவுனமாக இருந்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.

தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடகத்தில் உள்ள தொழில்கள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், இந்த அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை இந்த அரசு முறைப்படி நடத்தி, கர்நாடக அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். அம்மாவின் அரசு காவிரி பிரச்னையிலும், முல்லைப் பெரியாறு பிரச்னையிலும், மேக்கேதாட்டு பிரச்னையிலும் நடத்திய சட்டப் போராட்டங்களை, தொடர்ந்து இந்த அரசு எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் தராமல், மூத்த சட்ட வல்லுநர்களை நியமித்து தமிழகத்தின் உரிமையினை பாதுகாக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு எடப்பாடி கே பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.