பெங்களூரு : ”பெங்களூரின் யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி., மார்க்கெட், இரண்டு மாதங்களில், தாசனபுரா மார்க்கெட்டுக்கு மாற்றப்படும். இதுபற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது,” என கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார்.
சட்ட மேலவை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் ரவி கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் சோமசேகர் கூறியதாவது:அடுத்த இரண்டு மாதங்களில், யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி., மார்க்கெட் புறநகரில் உள்ள தாசனபுரா மார்க்கெட்டுக்கு இடம் மாற்றப்படும். இடம் மாற்றம் பணிகள் தாமதமாவதின் பின்னணியில், தந்திரம் அடங்கியுள்ளது. தாசனபுராவுக்கு இடம் மாற விருப்பமில்லாத வியாபாரிகள், தாமதப்படுத்துகின்றனர்.
யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டுக்கு, ஆயிரக்கணக்கான லாரிகளால், பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், மார்க்கெட்டை தாசனபுராவுக்கு இடம் மாற்ற முடிவானது.தாசனபுரா மார்க்கெட், 64 ஏக்கர் பகுதியில் உள்ளது. இங்கு யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி.,மார்க்கெட் இடம் மாற்றப்பட்டால், நகருக்குள் வரும் லாரிகளின் போக்குவரத்து குறையும். யஷ்வந்த்பூர் சுற்றுப்பகுதிகளில், போக்குவரத்து நெருக்கடி குறையும்.
பெங்களூரின் வளர்ச்சியை கவனித்த அரசு, 2006ல் தாசனபுரா அருகில் 64 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.விசாலமான மார்க்கெட்டை அமைத்தது. வியாபாரிகளுக்கு தேவையான, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது. சிறப்பான மார்க்கெட் அமைந்தும், வியாபாரிகள் இடம் மாற விரும்பவில்லை.கொரோனா நேரத்தில், வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு வர்த்தகர்கள், யஷ்வந்த்பூரிலிருந்து, தாசனபுராவுக்கு இடம் மாற்றப்பட்டனர். சில வியாபாரிகள் இப்போது, இங்கு வியாபாரம் செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement