வாஷிங்டன்: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என சீனாவை எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் மீது ரஷ்யா 23வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. சீனாவிடம் ரஷ்யா ராணுவ, பொருளாதார உதவிகள் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக சந்தித்துப் பேசினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்ததாகத் தெரிகிறது.
சந்திப்பின்போது, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என சீனாவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த எச்சரிக்கைக்கு சீன தரப்பில் என்ன கூறப்பட்டது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.
சீன வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதிபர் ஜி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டனர். அப்போது சீன தரப்பில், உக்ரைன் போரை சீனா விரும்பவில்லை. உலக நாடுகள் எந்தப் பிரச்சினையையும் நேரில் சந்தித்துப் பேசித் தீர்க்க வேண்டும். போர்க்களத்தில் சந்திப்புகள் கூடாது. மோதலும், போரும் யாருக்கும் நன்மை பயக்காது. அமைதியும், பாதுகாப்பும் தான் சர்வதேச சமூகம் போற்றிப் பாதுகாக்க வேண்டியவை என்று தெரிவிக்கப்பட்டது என்றார்.
அதேபோல் தைவான் பிரச்சினையில் தவறான வழிநடத்தல்கள் அமெரிக்காவுடனான நல்லுவறை முறிக்கும் என்று ஜி ஜின்பிங் எச்சரித்ததாகவும் கூறினார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி பேசுகையில், “உக்ரைன் விவகாரத்தில் சீனா எடுக்கும் நிலைப்பாட்டின்படி தான் வரலாற்றுப் புத்தகத்தில் அதன் பக்கங்கள் எழுதப்படும். அதை சீனா உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.
இருப்பினும், ரஷ்யாவை ஆதரித்தால் சீனா என்ன மாதிரியான நடவடிக்கைகளை சந்திக்கும் என்பது குறித்து அதிபர் பைடன் என்ன கூறினார் என்ற விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரஷ்யா நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.