"விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்!" – சிறப்புகள், எதிர்பார்ப்புகள் என்ன என்ன?

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியவை. தமிழகத்தில், ஆங்காங்கே நடைபெறும் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் தேடல்களால் கண்டறியப்படும் பழமையான சின்னங்கள், பொருட்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள் போன்றவை நம் முன்னோர்களின் பழங்கால வாழ்வியலை வெளிப்படுத்தி வருகின்றன. கலை, கல்வி, அறிவியல், பண்பாடு, தொழில்நுட்பம், வணிகம், நாகரீகம், விவசாயம் போன்றவற்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் எடுத்துரைத்திட தவறுவதில்லை.

அத்தகைய பழமையான பல வரலாற்று தகவல்களை தன்னகத்தே கொண்ட மாவட்டங்களில் ஒன்றுதான் விழுப்புரம். ஆகவே, இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவந்தது. இந்த நிலையில், 18.03.2022 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி ரூபாயில் அரசு அருங்காட்சியாகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விசிறி பாறை – தாய் தெய்வ பாறை

விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதை பற்றி, வரலாற்று ஆய்வாளரும், பேராசிரியருமான ரமேஷிடம் பேசினோம். “விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த மாவட்டம், வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தொன்மையான மாவட்டம்.

கல்மரம் தொடங்கி புதிய கற்காலத்தை சேர்ந்த ஈமை சின்னங்கள், ஓவியங்கள் இருப்பது குறிப்பிட தகுந்தவை. குறிப்பாக தேவனூர், நாயனூர், தேவநாதன் பேட்டை, ஆலம்பாடி, செத்தவரை, கிழ்வாலை ஆகிய பகுதிகளில் இருக்கும் சின்னங்களையும், ஓவியங்களையும் சொல்லலாம். சங்க காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் தொண்டூர் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. தமிழ் எழுத்து வளச்சிக்கு முக்கியமான அடையாளமாக செஞ்சி அடுத்த திருநாதர்குன்று திகழ்கிறது. இங்குள்ள கல்வெட்டில் தான் தமிழின் ‘ஐ’ என்ற எழுத்து தொடங்குவதை காணமுடிகிறது. தமிழகத்தின் முதல் குடைவரை கோயில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டில் தான் பல்லவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் காலத்திய ஓவியக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு பனமலை பேட்டையில் உள்ள ஓவியம்.

`ஐ’ தமிழ் எழுத்து உள்ள கல்வெட்டு

சுமார் 1300 ஆண்டுகள் பழமையான அந்த ஓவியம் இன்றும் காண கூடிய வகையில் உள்ளது. சோழர்கள் காலத்திய கட்டடக்கலை மற்றும் அவர்களின் காலத்திய முக்கிய தகவல்களுக்கு சான்றாக இந்த மாவட்டத்தில் அனேக கோயில்கள் இருக்கின்றன. உதாரணமாக பேரங்கியூர், திருவாமாத்தூர், திருவக்கரை, திருவெண்ணைநல்லூர், எசாலம், பிரம்மதேசம் போன்ற பகுதிகளில் உள்ள கோயில்களை குறிப்பிடலாம். எசாலம் கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட செப்பேடு வரலாற்று சிறப்பு பெற்றது. முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்ததையும், அதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு பிரம்மாண்டமான கோயிலை கட்டியதும் இந்த செப்பேட்டின் மூலமாகத்தான் தெரியவருகிறது. இது வரலாற்றில் பெரிய விஷயம்.

இந்த மாவட்டத்தில் பாண்டியர்கள் காலத்திய தகவல்களும் உள்ளன. ‘தென் இந்தியாவின் டிராய்’ எனப்படும் செஞ்சி மலைக்கோட்டை நாயக்கர்கள் காலத்திய சிறப்பு. அதேபோல, ஐரோப்பியர்கள் காலத்தில் விழுப்புரம் ஒரு கோட்டையாக இருந்துள்ளது. இன்றும் ‘கோட்டை விநாயகர் கோயில்’ ஒன்று உள்ளது. இப்படியாக விழுப்புரம் மாவட்டத்தில் பல வரலாற்று சிறப்பு மிக்க சின்னங்கள் அங்காங்கே சிதறி காணப்படுகின்றன. அதனை கண்டறிந்து முறையாக ஆவணப்படுத்த வேண்டும்.

தேவனூர்
பாறை ஓவியம்
பாறை ஓவியம்
மூத்த விநாயகர் – ஆலகிராமம்
தளவானூர் குடைவரை கோயில்
கல்வெட்டு – பிரம்மதேசம் கோயில்
மண்டகப்பட்டு குடைவரை கோயில்
எசாலம் கோயிலில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்
தளவானூர் குடைவரை கோயில்
திருநாவலூர் கோயில்
பனமலை பேட்டை
24 தீர்த்தங்கரர்கள் சிற்பம் – திருநாதர் குன்று

இங்குள்ள மக்கள், விழுப்புரம் மாவட்டத்தில் கிடைத்த வரலாறு பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள வேண்டும் என்றால், வரலாற்று சின்னங்கள் முழுமையாக காட்சிப்படுத்தப்பட வேண்டும். கேட்பாரற்று கோயில்களில் இருக்கும் சிலைகள், சிற்பங்கள் மீட்கப்பட வேண்டும். குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை அலுவலகங்களில் திறந்தவெளி அருங்காட்சியகமாக வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை மீட்கவேண்டும். முண்டியம்பாக்கத்தில், நாங்களும் தனிநபர்களாக சேகரித்து திறந்தவெளி அருங்காட்சியகம் வைத்துள்ளோம். அத்துடன், தனிநபர்கள் சேகரித்து வைத்துள்ள வரலாற்று பொருட்களும் அந்த அருங்காட்சியத்தில் இடம் பெறவேண்டும்.

மேலும், வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்களை இணைத்து அரசு ஒரு குழு அமைத்து இன்னும் நிறைய கள ஆய்வு செய்து அனேக தகவல்களுடன் இந்த அருங்காட்சியகம் அமைந்தால் சிறப்பாக இருக்கும். இதற்கான இடம் தேர்வும் சிறப்பாக அமையவேண்டும்” என்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தினர் நடத்திய மரபு நடை பயணத்தில் கலந்துகொண்டு உடையாநத்தம் என்ற பகுதியில் நம்மிடையே பேசியிருந்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார், “இந்தியாவில், தமிழ்நாடு தொல்லியல் வளம் நிறைந்த ஒரு மாநிலம். அதில் விழுப்புரம், வரலாற்றின் பல சின்னங்களை கொண்ட மாவட்டமாக இருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்கள் நினைவாக நடப்பட்ட பல அரிய சின்னங்களும், வாழ்வியலை வெளிப்படுத்தும் பாறை ஓவியங்களும் இங்கு இருக்கின்றன. இவை அழியும் தருவாயில் இருப்பதால், பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அதனால் இங்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். அதை அமைத்து தருவதாக, துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வாக்குறுதி அளித்துள்ளார். அப்படி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டால், இது போன்ற பழமையான சின்னங்களை பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும். தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறி பேசியிருந்தார்.

முனைவர் துரை.ரவிக்குமார்

இந்த நிலையில்தான், விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், “அருங்காட்சியகம் அமைத்து தருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு என்னிடத்திலே வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்ட மக்கள் சார்பாக, தமிழக முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். விழுப்புரம் மாவட்டத்திலும் அகழாய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது எனது நீண்டநாள் கோரிக்கை. அதனை துறை அமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும். பரிக்கல், கொடுக்கூர், கொத்தமங்கலம் முதலான இடங்களிலேயே பழமையான மண்பாண்ட ஓடுகள் குறியீடுடன் கிடத்துள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரை போல, சங்கராபரணி ஆற்றங்கரையும் தொன்மை வாய்ந்த நாகரீக்கத்தின் அடையாளமாக உள்ளது. அங்கு தான் பழமையான கல்மர பூங்கா உள்ளது. அந்த அளவிற்கு மிகவும் பழமையான காலத்திலையே இங்கு மக்களின் குடியிருப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

விழுப்புரம்

எனவே, இந்த பகுதியிலும் அகழாய்வு நடத்தப்பட்டால் தமிழின் தொன்மைக்கான ஆதாரங்கள் வெளிப்படும். இந்த அருங்காட்சியகத்திற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆய்வாளர்களை, ஒரு குழுவாக தமிழக அரசு நியமித்தால், அது இந்த அருங்காட்சியாகம் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.