சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இரண்டாவது வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருக்கிறது என்றும், விவசாயத் தொழிலாளர் நலன்கள் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை முன்வைத்துள்ளார்.“செய்வதை சொல்வோம்; சொல்வதை செய்வோம்” என்ற நடைமுறையில் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த உறுதிமொழிப்படி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆட்சியில் அமர்ந்த திமுக அரசின் வேளாண்மைத் துறையின் இரண்டாவது பட்ஜெட் விவசாயத் தொழிலை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம், பனை வெல்லம் உற்பத்திக்கு ஊக்கம், சூரிய ஒளி பம்பு செட், மலர் சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்த, வேளாண் பொருள் சார்ந்த தொழில் தொடங்குவது என்ற பல்வேறு பகுதிகளுக்கு மானியம் வழங்குதல், மதிப்புக் கூட்டு வேளாண் உற்பத்தி மையங்கள் தொடங்க முதலீட்டுக்கு மானிய உதவி, இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்குவது போன்ற முயற்சிகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
விவசாயப் பணிகள் பெருமளவு இந்திரமயமாகியுள்ள நிலையில் மேலும் இயந்திரமயமாக ஊக்கம் அளிப்பது, மனித உடல் உழைப்புக்கான வேலை வாய்ப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை படி விலை நிர்ணயம் செய்யவும், கொள்முதல் செய்யவும் பட்ஜெட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ள விவசாயத் தொழிலாளர் நலன்கள் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயற்குழு வரவேற்கிறது” என்றுத் தெரிவித்துள்ளார்.