தமிழகத்தில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணிக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில், “இது வேளாண் பட்ஜெட் அல்ல. வேளாண் மானியக் கோரிக்கையின்போது தரக்கூடிய கொள்கை விளக்கக் குறிப்புதான். வேளாண் பட்ஜெட்டுக்கான தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட். அனைத்து துறைகளின் நிதியையும் சேர்த்து வேளாண் பட்ஜெட் என்று மாயையை ஏற்படுத்தியுள்ளனர்.
அதிமுக ஆட்சிதான் விவசாயிகளுக்கு பொற்கால ஆட்சி. முதலமைச்சர் திராவிட மாடல் என்று கூறி வருகிறார், மு.க.ஸ்டாலின். எம்ஜிஆர் இருந்தபோது அது எம்ஜிஆர் மாடல், ஜெயலலிதா இருந்தபோது அது ஜெயலலிதா மாடல். இரண்டையும் சேர்த்து தமிழ்நாடு மாடலாக நாங்கள் உருவாக்கி உள்ளோம்” என்றார்.
“ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட்” என மக்கள் நீதி மய்ய கட்சி த்லைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
“பல லட்சம் கோடி கடனில் தமிழகம் மூழ்கியுள்ள நிலையில்,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல்,மேலும் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி இருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல். மொத்தத்தில் தமிழகபட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்த அறிவிப்பாக உள்ளது” என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார.
“வேளாண் நிதிநிலை அறிக்கை, மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது.உழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.