சென்னை:
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்கள் பெருநஷ்டத்துக்கு ஆளானார்கள். ஆனால் இந்த பட்ஜெட்டில் வடகிழக்கு பருவமழையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கொடுக்கிறோம் என்றார்கள்.
இன்று விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். நெல்மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவந்தவுடன் அதை கொள்முதல் செய்வதில்லை. அதை திறந்த வெளியில் விவசாயிகள் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.
மழையால் அந்த நெல் மணிகள் முளைத்து விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரண தொகையும் வழங்கப்படவில்லை. நீதி மன்றத்தில் கூட இந்த வழக்கு நடைபெற்றது.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரசு முறையாக பாதுகாக்காத காரணத்தினால் அந்த நெல்லும் முளைத்து போய்விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் மூட்டைகளுக்கும் மேலாக நெல் வீணாகி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடன் ரூ.12 ஆயிரத்து 110 கோடி கடனை நாங்கள் தள்ளுபடி செய்தோம்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு குறைவாக நகை அடமானம் வைத்து கடன்பெற்றவர்களின் கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார்கள். தமிழகத்தில் 48 லட்சம் பேர் கடன் வாங்கி அதை மீட்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
48 லட்சம் பேரை ஆய்வு செய்ததில் 13 லட்சம் பேரை தான் அதில் தேர்வு செய்திருக்கிறார்கள். மீதமுள்ள 35 லட்சம் பேர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படமாட்டாது என்று அறிவித்து இருக்கிறார்கள். இந்த 13 லட்சம் பேர் கூட மீண்டும் மறுஆய்வு செய்யப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
வேளாண் பட்ஜெட்டை கண்துடைப்பாகவே பார்க்க முடிகிறது. அதில் எந்த ஒரு பெரிய திட்டமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்… கொரோனாவால் பள்ளிக்கு செல்லாததால் 80 சதவீதம் குழந்தைகள் வாசிக்கும், எழுதும் திறனை இழந்து விட்டனர்