கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடகா நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிஜாப் தடைக்கு எதிராக மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியில் கடந்த 17ம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரஹமதுல்லா உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை தேடி வருகின்றனர்.
கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் கடந்தமாதம் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், விசாரணை முடியும் வரை ஹிஜாப் அல்லது காவித் துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
அந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், கடந்த மார்ச் 15 ஆம் தேதி “கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும். ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல” என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM