சென்னை: தமிழகம் முழுவதும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1,127 போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு பணியிட மாறுதல் வழங்கினார். ஆனால், இந்த உத்தரவைமாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் நடைமுறைப்படுத்தாமல், காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் 3 மாதங்களாகியும், பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாமல் போலீஸார் தவித்தனர். சென்னையில் மட்டும் சுமார் 400 போலீஸார் பணியிட மாறுதல் வந்தும், சொந்த ஊருக்குச் சென்று பணி செய்ய முடியாமல் பரிதவித்து வருவதாகவும் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் டிஜிபி தலையிட்டு, உரிய தீர்வுகாண வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது. இந்நிலையில், இது தொடர்பாக `இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 14-ம் தேதி செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, பணி யிட மாறுதல் வழங்கப்பட்ட உத்தரவை, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் அதிகாரிகள் நிறைவேற்றி உள்ளதாக டிஜிபிஅலுவலக அதிகாரிகள் தெரிவித் தனர்.