சென்னை: 2022 – 23 நிதியாண்டில் 126 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை எட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக வேளாண் பட்ஜெட் 2022 23 ஐ தாக்கல் செய்து பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டின் புவியியல் இருப்பிடத்தின் அமைப்பின் படி, உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரிதளவு உணரப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள 29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்று ஆறாவது காலநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், வேளாண்மையில் அதன் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.
காலநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக மாற்றுப்பயிர் சாகுபடி முறை ஊக்குவிக்கப்படுகிறது. இதன் கீழ், அதிக நீர்த்தேவை கொண்ட பயிர்களுக்கு மாற்றாக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் சாகுபடியை விவசாயிகளிடையே பரவலாக்கம் செய்திட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மானாவாரி நிலங்களில் உற்பத்தித்திறனை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களான நீர்சேகரிப்புக் கட்டமைப்புகள், நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கிடவும் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
2022-23 ஆம் ஆண்டில் வேளாண்மையில் இந்தக் கூறுகளெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 126 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.