ஏற்கெனவே வெளியான கதைகளைப் படமாக்குவது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல; என்ற போதும் இப்போதும் அப்படியான படங்களைப் பற்றி பேச இந்த படங்களின் இயக்குனர்கள்தான் காரணம்.
தற்போது எம்.பி ஆக இருக்கும் சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவல் தான் 2012-ல் வெளியான இயக்குநர் வசந்தபாலனின் ‘அரவான்’ படத்திற்கு கதை ஆதாரம்.
வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. இந்தப் படத்தின் கதை மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலில் இருந்து எடுக்கப்பட்டது.
தனுஷின் நடிப்பில் அசுரத்தனமான வெற்றியைப் பெற்ற ‘அசுரன்’ படம் வெற்றிமாறன் இயக்கியது. கதை எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலில் இருந்து எடுக்கப்பட்டது.
பாலாவின் ‘நான் கடவுள்’ படம் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலின் தாக்கத்தால் உண்டானது. ஆர்யா நடித்து 2009இல் வெளியானது.
பாலாவின் இயக்கத்தில் தேயிலைத் தோட்ட வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கூலித் தொழிலாளர்களின் கதையைப் பேசிய ‘பரதேசி’ படம் பி.எச்.டேனியல் எழுதிய ‘எரியும் பனிக்காடு’ (Red Tea) என்கிற நாவலின் கதை.
அகதிகளாக இடம்பெயரும் மக்களின் கதையை உணர்ச்சிபூர்வமாக பேசிய மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தின் கதை சுஜாதாவின் ‘அமுதாவும் அவனும்’ சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்டது.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ படத்தின் கதை ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாவெய்ஸ்கி எழுதிய ‘வெண்ணிற இரவுகள்’ நாவலின் பாதிப்பால் உருவானது.
சசி இயக்கத்தில் பார்வதி நடித்த ‘பூ’ திரைப்படம் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
எழுத்தாளர் ஷான் கருப்பசாமி எழுதிய ‘வெட்டாட்டம்’ நாவல் தான் ஆனந்த் சங்கர் இயக்கிய ‘நோட்டா’ படம். விஜய் தேவராகொண்டா கதாநாயகராக நடித்திருந்தார்.
ராஜேஷ்குமார் எழுதிய ‘எண்ணி எட்டாவது நாள்’ கிரைம் நாவல் அருண் விஜய் நடிப்பில் ‘குற்றம் 23’ படமாக எடுக்கப்பட்டது.
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் தான் இயக்குநர் தங்கர் பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’. சேரன் நடிப்பில் வெளியானது.
ஜெயமோகனின் ‘துணைவன்’ கதை, எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவல் ஆகியவை வெற்றிமாறனின் இயக்கத்தில் படமாக உள்ளன. முன்னாடியே கதையைப் படித்தாலும் இயக்குனரின் பார்வையில் அந்தக் கதை எப்படி வரும் என்பது தான் சுவாரசியமானது!